ஜவாஹிருல்லா திமுக உறுப்பினர் ஆயிட்டாரு... மமக உறுப்பினர் பதவியைப் பறிக்கணும்.. நீதிமன்றத்தில் வழக்கு..!

By Asianet TamilFirst Published Oct 28, 2021, 7:45 PM IST
Highlights

கட்சி விதி 23-ஆவது பிரிவின் கீழ் மமக, தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் பிற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என்றும் விதி கூறுகிறது. 

மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் ஜவாஹிருல்லாவின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி (மமக) 2 தொகுதிகளில் போட்டியிட்டது. பாபநாசம், மணப்பாறை என இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் மமக வெற்றி பெற்றது. தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றனர். தற்போது இதுவே கட்சிக்குள் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக உறுப்பினர்கள் என அபிடவிட் தாக்கல் செய்து போட்டியிட்ட ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோரின் கட்சிப் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று திருச்சி தென்னூரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம் என்பவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னை சிட்டி சிவில் 15-ஆவது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் ஆகிய தொகுதிகளில் திமுக கட்சி சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் விதிமுறை 6-ஆவது பிரிவின்படி வேறு கட்சி உறுப்பினர்கள் எவரும், மமகவில் உறுப்பினராக முடியாது. அதேவேளையில் கட்சி விதி 23-ஆவது பிரிவின் கீழ் மமக, தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் பிற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என்றும் விதி கூறுகிறது. ஆனால், மமக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் பொதுச்செயலாளர் அப்துல்சமதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், தங்களை திமுக உறுப்பினர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். அதன் காரணமாகவே, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே, ஜவாஹிருல்லாவும் அப்துல்சமதுவும் மனிதநேய மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர முடியாது” என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட கணேசமூர்த்தி (மதிமுக), ரவிக்குமார் (விசிக), பாரிவேந்தர் (இஜக), சின்னராஜ் (கொமதேக) ஆகியோரின் எம்.பி. பதவிகளை பறிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது, மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் அதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
 

click me!