கிடுக்கிப்பிடி போடும் லஞ்ச ஒழிப்புத் துறை.. தயாராகும் சம்மன்.. நெருக்கடியில் ஈபிஎஸ்ஸின் வலதுகரம் இளங்கோவன்..!

By Asianet TamilFirst Published Oct 28, 2021, 7:11 PM IST
Highlights

குறிப்பாக ரூ.70 கோடிக்கு வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகள் தெரிய வந்திருப்பதால், விசாரணையைப் பல கோணங்களில் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ஜெயலலிதா பேரவை சேலம் மாவட்டச் செயலாளர் எனப் பல பதவிகளில் இருக்கிறார். சேலத்தில் அதிமுகவினர் இடையே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்த இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் பார்வை பதிந்தது. குறிப்பாக சேலத்தில் பிரம்மாண்டமாக அவர் கட்டி வரும் பங்களா குறித்து விசாரணை நடத்திய பிறகு அவருடைய சொத்துக்கள் மலைக்க வைத்ததால், அதிரடி ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்தது.

இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கடந்த வாரம் இவர் தொடர்புடைய 36 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத 21 கிலோ தங்கம், 482 கிலோ வெள்ளி, ரூ.34.28 லட்சம் ரொக்கம், கார்கள், பேருந்துகள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டன. மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரூ.70 கோடி அளவுக்கு பங்கு முதலீடுகள் செய்திருந்ததையும் போலீஸார் மோப்பம் பிடித்தனர். இந்தச் சோதனையில் வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இளங்கோவனும் அவருடைய மகன் பிரவீன்குமாருக்கும் நெருக்கடி அதிகரித்தது. 

இதற்கிடையே கைப்பற்ற ரொக்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆதாராங்களையும் ஆவணங்களையும் சேகரிக்கும் பணியில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரூ.70 கோடிக்கு வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகள் தெரிய வந்திருப்பதால், விசாரணையைப் பல கோணங்களில் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில், வெளிநாட்டில் முதலீடு செய்யும் அளவுக்கு வருமானம் எப்படி, எந்த வழியில் வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இளங்கோவனிடம் கேட்க உத்தேசித்துள்ள கேள்விகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரூ.5 கோடி மதிப்பில் இளங்கோவன் கட்டி வரும் பங்களா குறித்தும் கேள்வி கேட்க போலீஸார் முடிவு செய்திருப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!