
ஜூன் 3 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் - சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் - உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர். இத்தகைய பெருமைகளையெல்லாம் பெற்று, நம் இதயங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவற்றில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் என தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே.
இதுபோன்று ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.