விவசாயிகள் வயிற்றில் பால்வார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2021, 1:41 PM IST
Highlights

மேட்டூர் அணையிலிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.  

ஜூன் 12 ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: 

மேட்டூர் அணையிலிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னதாக இம்மாதம்  நீர்வளத் துறை அமைச்சர்,  வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை அமைச்சர், வோளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர் மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து அறிவிப்பினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். 

மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 3-6-2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா 2 மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதிபெறும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர் வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது. 

இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சிமருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
 

click me!