தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? நாளை மறுநாள் வெளியாகிறது முக்கிய முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 3, 2021, 1:23 PM IST
Highlights

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் +2 தேர்வு குறித்து எப்போது அறிவிக்கப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததை அடுத்து, தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோரது கருத்துக்களை பெற்று தெரிவிக்கும் படி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை  கேட்டறிய இமெயில் மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் +2 தேர்வு குறித்து எப்போது அறிவிக்கப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். பல்வேறு கருத்துக்களை பெற்றுள்ளோம், அதன் அடிப்படையில் நாளை மறுநாள் முதலமைச்சர் இறுதி முடிவை வெளியிடுவார். இது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் கருத்து கூற முடியாது. 

ஏற்கனவே மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் +2 தேர்வு நடத்த வேண்டும் என பெரும்பாலான மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. ஆனால் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்னர் 5 மணிக்கு மருத்துவ நிபுணர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் நல சங்கங்கள் ஆகியவற்றுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அனைவரும் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் இறுதி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.  
 

click me!