திருச்சியை திணற வைக்கும் திமுக.. முழு பலத்தையும் காட்ட முடிவு செய்த ஸ்டாலின்.. குவியும் தொண்டர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 4:53 PM IST
Highlights

விடியலுக்கான முழக்கம் என்ற இந்த தலைப்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. மாநாடு திருச்சியில் நடைபெறுவதையொட்டி திருச்சி முழுக்க இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

மண்டையைப் பிளக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக திமுக தொண்டர்கள் திருச்சி பொதுக்கூட்டத்தில் குவிந்து வருகின்றனர். இலட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக சார்பில் பிரமாண்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அது பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் பல வாரங்களாக நடந்து வந்த நிலையில், 759 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் கே. என் நேரு தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 

மாநாட்டில்  தமிழக வளர்ச்சிக்கான அடுத்த பத்தாண்டிற்கான செயல் திட்டத்தினை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அதற்காக பிரம்மாண்டமான  பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.  மேடேக்கு இடதுபுறமும் வலதுபுறமும் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது,  அதில் ஸ்டாலின் நடந்து சென்றவாறு தொண்டர்களை நேரடியாக சந்தித்து உரையாற்ற உள்ளார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் 2 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பஸ் கார் மூலம் வருகை தந்திருப்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் 200 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்துள்ளார். 

திருச்சியைச் சுற்றி கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை நெடுகிலும் திமுக கொடிகள் நாட்டப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானத்தில் 230 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன,  விடியலுக்கான முழக்கம் என்ற இந்த தலைப்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. மாநாடு திருச்சியில் நடைபெறுவதையொட்டி திருச்சி முழுக்க இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். கூட்டம் மாலை நடைபெற உள்ளதால் சுமார் 10 லட்சம் பேர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள்,  மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அமர்வதற்கு என மூன்று விதமான மேடைகள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. திமுகவின் மொத்த வலிமையும் காட்டும் விதமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

click me!