ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு..! தேசிய அளவில் ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள்..!

By Manikandan S R SFirst Published Dec 26, 2019, 2:52 PM IST
Highlights

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் நிகழ்விற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜார்க்கண்ட் தேர்தல் வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் வந்தது. இடையில் பாஜக 33 இடங்களில் முன்னிலை பெற்று இழுபறி ஏற்பட்டது. பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்றது. ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 16 இடங்களிலும் ஆர்.ஜே.டி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ஆளும் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. 79 இடங்களில் போட்டியிட அக்கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  முதல்வர் ரகுபர் தாஸ் ஜம்சேத்புர் தொகுதியில் சுயேச்சை வேட்பளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜார்க்கண்டின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதிவு ஏற்க இருக்கிறார். ஜே.எம்.எம் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், ஆளுநர் திரௌபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து வருகிற 29ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தேசிய அளவில் எதிர்கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு வந்துதுள்ளது. தொலைபேசி மூலமாக ஸ்டாலினிடம் பேசிய ஹேமந்த் சோரன், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைத்திருக்கிறார்.

click me!