
பாஜகவின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் வீணாக திமுகவை வம்புக்கிழுக்கிறார் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது, என்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார்.
சட்டமன்றத்திற்குள் நடக்கும் தி.மு.க.,வின் ஆக்கபூர்வமான விவாதங்களை, குதிரை பேர அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் இலவச இணைப்பாக ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.
ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து டெல்லியில் உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.என்று கூறியுள்ளார்.