டெங்கு இல்லன்னு சொல்வது அப்பட்டமான பொய் - தமிழக அரசை வறுத்தெடுக்கும் அன்புமணி ராமதாஸ்

First Published Jul 10, 2017, 2:52 PM IST
Highlights
It is a blatant lie to say that there is no dengue by anbumani ramadoss


மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அளிக்க தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்பதையே டெங்கு உயிரிழப்புகள் காட்டுகின்றன என்றும் கடந்த சில ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் அதிகம் பேர் உயிரிழந்ததைப் போன்று இந்த ஆண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சலால் கடந்த சில நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக டெங்கு காய்ச்சல் இல்லை என்று அரசு சாதிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் இருவகையான காய்ச்சல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

மற்றொருபுறம் கேரளத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள எலிக்காய்ச்சலும் இந்த மாவட்டங்களில்  பரவத் தொடங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது கட்டுப்படுத்தப்படவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் அரசின் அலட்சியம் தான். கிட்டத்தட்ட மேற்கு மாவட்டங்கள் அனைத்திலுமே சுகாதாரப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை.

உயிரிழப்புகளுக்கு காரணம் டெங்கு காய்ச்சல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மூடி மறைக்கும் செயல்களில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது.

இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அவலம் ஆகும். மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அளிக்க தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்பதையே டெங்கு உயிரிழப்புகள் காட்டுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் அதிகம் பேர் உயிரிழந்ததைப் போன்று இந்த ஆண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதை தமிழக அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகளை செய்யவும் தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார். 

click me!