
ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஒபிஎஸ் அணியின் மதுசூதனன் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் இறங்கினர்.
அதில் சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனும் களம் இறங்கினர். ஆனால் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த தொகுதியில் கடந்த சில தினங்களாக கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அப்பகுதி மக்களோடு சேர்ந்து ஒபிஎஸ் அணியின் மதுசூதனனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு தெரியாமல் செல்ல மாட்டோம் என கூறியதால் மதுசூதனன் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.