
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று கதிராமங்கலத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த வருகின்றனர்.
அண்மையில், பரங்கிவெட்டிக்காடு பகுதியில் ஆதரவு முழக்கப் போராட்டம் நடைபெற்றது- இதில் ஆம்பலாப்பட்டு, கரம்பயம், கண்ணுக்குடி, முள்ளுர்பட்டிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்காதே என்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி வைகோ, முத்தரசன், பழ.நெடுமாறன், வேல்முருகன், மணியரசன் ஆகியோர் பேரணியாக கதிராமங்கலத்தை நோக்கி பேரணி செல்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், ராமநாதபுரத்தில் இருந்து கதிராமங்கலம் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணி நடத்துகின்றனர்.