
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்த பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை பார்த்து சிரித்தார். அவர் அதிமுகவின் துரோகி என்றெல்லாம் குற்றம் சாட்டியது சசிகலா தரப்பு. ஆனால், நான் யாரை பார்த்து சிரித்தேன் என்று குற்றம் சாட்டினார்களோ, அவர்களுடனேயே தற்போது எடப்பாடி கூட்டணி வைத்து செயல்படுகிறார் என்று பன்னீர் குற்றம் சாட்டியுள்ளார்.
பன்னீர் அணியின் சார்பில், ராமநாதபுரத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய பன்னீர், காஞ்சியில் தொடங்கி, 9 வது மாவட்டமாக இங்கு கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக கலந்தது ராமநாதபுரம் மண். ராவணனை அழிக்க ராமர் கால் பதித்த பூமி இது. கூனியின் சூழ்ச்சியால் ராமர் ஆட்சியை இழந்தார். சில சூழ்ச்சிகாரர்களின் சதியால் நாம் அம்மாவின் ஆட்சியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமான நம் எதிரிகளை பழி வாங்க இங்கு சபதம் எடுப்போம்.
வறட்சி மாவட்டம் உங்கள் எழுச்சியால் புரட்சி மாவட்டமாக மாறியிருக்கிறது. நமது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தினம் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து கொண்டிருக்கிறார்கள். யாரை பார்த்து நான் சிரித்தேன் என குற்றம் சொன்னார்களோ அதே நபருடன் எடப்பாடி கூட்டணி வைத்து சட்டமன்றத்திற்குள் செயல்படுகிறார்.
தன்னை கொடுமை படுத்தி வேலை வாங்கும் முதலாளி ஒழுங்காக படிக்காத அவரது மகளை தனக்கு கட்டி வைப்பார் என கழுதை ஒன்று கனவு கண்டதாம். அதே போல்தான் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். கழுதையின் கனவு போல் ஸ்டாலினின் கனவும் நிறைவேறப் போவதில்லை என்று பன்னீர் கூறினார்.