திமுக இந்தி மொழியை எதிர்த்து வருகிறது, ஆனால் தனது குடும்ப வியாபாரம் என்று வரும்போது ஸ்டாலின் குடும்பத்தினர் ஹிந்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கிண்டல் செய்துள்ளார்.
திமுக இந்தி மொழியை எதிர்த்து வருகிறது, ஆனால் தனது குடும்ப வியாபாரம் என்று வரும்போது ஸ்டாலின் குடும்பத்தினர் ஹிந்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கிண்டல் செய்துள்ளார். திமுகவினர் அரசுப்பள்ளி குழந்தைகள் இந்தி கற்றுக்கொள்ளக் கூடாது என எதிர்க்கிறார்கள் ஆனால் குடும்ப வருமானத்திற்காக இந்தித் திரைப்படங்களை வெளியிடுகின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சமூக நீதி, பெண் விடுதலை என்ற சித்தாந்தங்களை முன்னிருத்தி இயங்கி வரும் திமுக நடத்திய மிகப் பெரும் போராட்டங்களில் ஒன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் அண்ணா, கலைஞர் கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் வரை இந்தி திணிப்பை எதிர்ப்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட மத்திய பாஜக அரசு இந்தி திணிக்க முயற்சிப்பதாக்கூறி திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இந்தியை திணிக்கும் முயற்சியில் இறங்கும் போதெல்லாம், திமுக போராட்டத்தில் இறங்குவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் லால் சிங் சப்தா, இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தி மொழியை எதிர்த்து வரும் திமுகவினர் இந்தி தெரியாது போடா என விமர்சித்து வரும் உதயநிதி போன்றோர் இந்தி படத்தை வெளியிடுவது எதனால் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தெரியாது போடா என்று சொன்னது இந்தித்திணிப்புக்கவே தவிர இந்தி மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அல்ல.
தனிப்பட்ட ஒருவர் விரும்பினால் இந்தி மொழியை கற்றுக் கொள்ளலாம், ஆனால் ஒரு மொழியையும் திணிப்பதை ஏற்க முடியாது என அவர் கூறினார். ஆனால் அவரது இந்த விளக்கத்தை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உதயநிதியின் இந்த கருத்தை கிண்டல் செய்து பேட்டி கொடுத்துள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி தனது தொகுதி மக்களுக்கு தேசியக் கொடியை வழங்கியனார்,பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆவர் கூறுகையில், 75வது சுதந்திர தின விழாவை நாட்டு மக்கள் ஒரு திருவிழாவைப் போல கொண்டாட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக பொதுமக்களுக்கு பாஜக சார்பில் தேசிய கொடி வழங்கி வருகிறோம், திமுகவினர் அரசு பள்ளியில் குழந்தைகள் இந்தி கற்றுக்கொள்ள கூடாது என எதிர்க்கின்றனர், ஆனால் தங்களது குடும்பத்திற்கு வியாபாரம் என வரும்போது ஹிந்தித் திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காக அவர்கள் ஹிந்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகள் இன்னொரு மொழியை (ஹிந்தி) கற்றுக் கொள்வதை எதிர்க்கின்றனர் என அவர் விமர்சித்துள்ளார்.