
முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலகம் வருவதையொட்டி அவரை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.
இதை நெட்டிசன்கள் சசிகலா விமர்சனத்தை வைத்து வாங்க சிரிக்கலாம் என்று கலாய்த்து வருகின்றனர்.
முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பின்னர் காட்சிக்கு எளியவராக சட்டசபையில் பொது இடங்களில் எதிர்கட்சிகளுடன் நாகரீகத்துடன் நடந்து கொண்டார்.
அதிமுக திமுகவில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு அரசியல் நாகரீகம் நிகழ்ந்தது.
சட்டசபையில் மோதல் போக்கு இருந்தாலும் பன்னீர்செல்வத்தின் அணுகுமுறை காரணமாக சட்டசபை சட்டசபையாக இல்லாமல் சந்தோச சபையாக முடிந்தது.
அய்யா நீங்களே 5 வருடம் ஆள வேண்டும் அதற்கு திமுக முழு ஆதரவு உண்டு என்று துரைமுருகன் பேச அதை ஸ்டாலின் ரசிக்க ஓபிஎஸ் சிரிக்க ஒரு சந்தோசமான சூழல் சட்டசபையில் இருந்தது.
எப்போதும் முதல்வர் பதிலுரையை புறக்கணிக்கும் திமுக இந்த முறை வெளிநடப்பு செய்த பின்னரும் ஓபிஎஸ்ஸின் உரையை முழுவதுமாக கேட்டனர்.
உரையின் இறுதியில் ஓபிஎஸ் எனது பதிலுரை எதிர்கட்சி தலைவருக்கும் பிடித்திருக்கும் துணை தலைவருக்கும் பிடித்திருக்கும் என்று சிரித்தபடி ஸ்டாலினை பார்த்து கூற அவரும் சிரித்தபடி அமர்ந்திருந்தார்.
இது போன்ற நிகழ்வுகளை அனைத்து பத்திரிகைகளும் பொதுமக்களும் அரசியல் ஆர்வலர்களும் வரவேற்றனர்.
ஓபிஎஸ் கடந்த 7ஆம் தேதி சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பின் அன்று இரவு பேட்டியளித்த சசிகலா கோபத்துடன் ஸ்டாலினை பார்த்து பன்னீர்செல்வம் சிரித்தார் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் விலங்குகளிடம் இல்லாத மனிதர்களிடம் உள்ள சிறப்பு சிரிப்புதான் என்று கூறினார்.
அதன் பின்னர் இந்த கருத்துக்கள் பரவலாக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை செயலகத்துக்கு வருகிறார்.
அவர் வருவதை அறிந்த ஸ்டாலின் அவரை சந்திக்க தலைமை செயலகம் வந்துள்ளார்.
இதை வலைதளங்களில் நெட்டிசன்கள் ஓபிஎஸ்சை சந்திக்க ஸ்டாலின் வருகை - வாங்க சிரிக்கலாம் என்று போட்டு கலாய்த்து வருகின்றனர்.
என்னதான் கலாய்த்தாலும் முதல்வரை சந்திக்கும் ஸ்டாலின் தமிழக வறட்சி விவசாயிகள் தற்கொலை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு நிதியுதவி போன்ற விசயங்களில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துவார் என்று தெரிகிறது.