
ஓபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்டுள்ள அதிகாரச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை வரை அழைக்கக்கூடாது என ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு அமைக்க சசிகலாவை அழைப்பதற்கு ஆளுநர் தாமதம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் வெட்கக்கேடானது என தெரிவித்தார். ஆனாலும் அதிமுக உக்கட்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலையிடாது என தெரிவித்தார்.
அதிமுக வில் நடக்கும் அதிகாரச் சண்டையை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இப்பிரச்சனையில் திமுக என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றித்தான் காங்கிரஸ் முடிவும் இருக்கும் எனவும் இளங்கோவன் தெரிவித்தார்.
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பொருத்து ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
மேலும் கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார். பேட்டியின் போது அவர் பேசுகிற தோரணையே மிரட்டுவது போல உள்ளது என்று சசிகலா ஒரு பெண் தாதாவாகவே மாறி விட்டார் என்றும் ஈவிகேஸ் குற்றம் சாட்டினார்.