
ஈழ தமிழின அழிவுக்கு காரணமான காங்கிரஸுடன் பிணைந்து கிடக்கும் தி.மு.க.வை. தன்மானம் உள்ளவன் கூட்டணி வைக்க மாட்டான்! எனும் ரேஞ்சுக்கு தொண்டை நரம்புகள் தெறிக்கத் தெறிக்கப் பேசிய வைகோ இதோ ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். ஆதரவோடு விட்டாரா? தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பொங்கி அடங்குகிறார் வைகோ.
இது மிக முக்கியமாக உற்று நோக்கப்படுகிறது அரசியல் பார்வையாளர்களால்.
இது பற்றிப் பேசும் விமர்சகர்கள் “தி.மு.க.விலிருந்து விலகி தனிக்கட்சி துவக்கிய வைகோவுக்கு அரசியல் வெற்றி என்று பெரிய சந்தோஷம் எதுவும் கிடைத்துவிடவில்லை.
தனிக்கட்சி துவங்கிய புதிதில் இருந்த வரவேற்பில் சில வெற்றிகளும், அதன் பின் கூட்டணி பலத்தில் சில வெற்றிகளும் வந்தனவே தவிர அவரால் தேர்தல் அரசியலில் சோபிக்க முடியவில்லை.
கடந்த பொதுத் தேர்தலில் வைகோ மிகவும் பிரயத்னப்பட்டு துவக்கிய மூன்றாவது அணியால் தி.மு.க.வின் ஆட்சி அமைப்பு கனவை கலைக்க முடிந்ததுதான். ஆனால் ஜெயலலிதாவின் பினாமியாகவே வைகோ இந்த மூன்றாவது அணியை அமைத்துள்ளார்..என்கிற அவப்பெயரை சுமக்க வைத்தது.
ஜெ., வென்றதும் இந்த பேச்சின் வீரியம் அதிகரித்தது. இது போக மூன்றாவது அணியான மக்கள் நல கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்தது அவரை அசைத்துப் பார்த்துவிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தின் பின் பொத்தாம் பொதுவாக அரசியல் செய்துவிட்டு மெளனம் காத்த வைகோ, சில மாதங்களுக்கு முன் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார். இதன் பலனால் முரசொலி விழா மேடையை அலங்கரிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
பின் இந்திரா நூற்றாண்டு விழா மேடையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியன தி.மு.க.வுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய வகையில் வைகோ அதை சிந்திக்க துவங்கினார்.
பின் ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவை அறிவித்தார். தி.முக. நடத்திய ஆதரவு கட்சி தலைவர்கள் பொதுக்கூட்ட மேடையில் வைகோ பேச எழுந்ததும் தி.மு.க.வினர் காட்டிய ஆரவாரமும், வரவேற்பும் வைகோவை கலங்கச் செய்தன. இதை ம.தி.மு.க.வும் வரவேற்றது.
பொதுவாக தேர்தல் அரசியலை பொறுத்தவரையில் தான் எடுக்கும் முடிவை தனது கட்சியினர் மேல் வைகோ திணிப்பார் என்பார்கள். ஆனால் தற்போது தி.மு.க.வுடன் ம.தி.மு.க. காட்டும் நெருக்கத்தைப் பொறுத்த வரையில் அவரது கட்சி நிர்வாகிகளும் இதை விரும்புகிறார்கள் என்கிறார்கள்.
ம.தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக்குழு கூட்டமும் தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டையே வலியுறுத்துகிறதாம். தஞ்சாவூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் மல்லை சத்யா, செந்திலதிபன் ஆகியோர் கருணாநிதியை பாராட்டி பேசிய பேச்சும் இந்த பின்னணியில் நிகழ்ந்ததே என்கிறார்கள்.
ஆக வைகோவும், ஸ்டாலினும் பொதுமேடைகளில் நெருங்கி மருகி உருகுவதைப் பார்த்தால் ம.தி.மு.க. என்றால் மறுபடியும் தி.மு.க! என்றாகிவிடுமோ? என்கிறார்கள் விமர்சகர்கள்.