
இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் தினம் தினம் தினம் தீபாவளி கொண்டாடும் ஏரியா ஆர்.கே.நகர்தான். அங்கே இது நாள் வரை கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நபர்கள் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பிரச்சார வேலைகளில் சம்பாதிக்கத் துவங்கிவிட்டார்களாம்.
காலை 8 மணிக்கு மினி லாரிகள், ஆட்டோக்கள், பிக் அப் வாகனங்கள் ஆங்காங்கே வந்து நிற்க! அதில் ஏறுகிறார்கள். வேட்பாளர் செல்லுமிடமெல்லாம் ஒரு மாஸ் காட்டுவதற்காக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனராம்.
நான்கைந்து மணி நேரம் இந்த வேலையைப் பார்த்தால் போதும் மதிய உணவு, அடிக்கடி டீ, நொறுக்கு தீனி என்று வயிறு நிறைகிறதாம். கூடவே டூட்டி டைம் முடிந்ததும் பாக்கெட்டுக்கும் பணம் வந்து சேருகிறதாம்.
எந்தெந்த வேலைக்கு எவ்வளவு பணம் தெரியுமா?
வேட்பாளருடன் ஊர்வலத்தில் வந்தால்: 300 ரூபாய்
ஊர்வலத்தில் நோட்டீஸ் கொடுத்தால்: 500 ரூபாய்
வரவேற்புக் கோலம் போட்டால்: 1000 முதல் 2000 வரை
மாடியிலிருந்து பூ தூவி வரவேற்றால்: 2000 ரூபாய்
ஆரத்தி எடுத்தால்: 2000 ரூபாய்
வெற்றித் திலகமிட்டால்: 3000 ரூபாய்
வேட்பாளரின் கையில் குழந்தையை கொடுத்து பெயர் சூட்ட வைத்தால்: 3000 ரூபாய்
இப்படி வருகிறது வருமானம். இது தவிர கரகாட்டம், செண்டை, குத்தாட்டம் செலவுகள் தனி. குவார்ட்டர் செலவு தனியோ தனி.
இது போக பூக்கள், கோலப்பொடிகள், ஆரத்தி தட்டுக்கள், அதில் வைக்கும் வெற்றிலை, கற்பூரம், வேட்பாளருக்கு அணிவிக்க வேண்டிய மாலை ஆகியவற்றை சப்ளை செய்ய தனித்தனி ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
ஆக மொத்தத்தில் ராதாகிருஷ்ணன் நகரில் பல வகைகளில் பண மழை பொழியுது!