
டிசம்பர் மாதம் வந்தால், சென்னை வாசிகள் மழையை, புயலை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்த வருடமும் ஏமாற்றாமல், இரண்டும் சென்னை வாசிகளின் கதவைத் தட்டி, வெள்ளம் கரை புரண்டு கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தது. கூரையைப் பிய்த்துக் கொண்டு வீட்டுக்குள் கொட்டியது மழை.
அந்த ஒரு நாள் மழைக்கே தாங்காமல் தவித்தனர் சென்னை வாசிகள். எங்கும் வெள்ளம். மக்கள் அவதி என்று செய்திகளில் கேட்டுக் கேட்டுப் போரடித்ததால் தானோ என்னவோ, அடுத்த ஓரிரு வாரங்களில், அதே பாணியில் இந்தச் செய்திகளைக் கேட்ட வேண்டியிருக்கிறது.
இப்போதும் சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் தேர்தல் புயல் அடிக்கிறது. பண மழை பொழிகிறது. ஆனால் அவதிப் படுவதென்னவோ, அதிகாரிகள்தான்! தொகுதி மக்களுக்கு அடித்தது ஜாக்பாட். சென்ற முறை தேர்தல் அறிவிக்கப் பட்ட போதும், பண மழை பொழிந்தது. ஆனால் புகார்கள் ஒவ்வொருவர் மீதும் குவிந்ததால், தேர்தல் நிறுத்தப் பட்டது. இப்போதும் புகார்கள் குவிகின்றன.
பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இது சென்ற முறை, மட்டுமல்ல இந்த முறையும்தான்.
எங்களால் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் கையை விரித்துச் சொன்னது. தங்களின் இயலாமையை அன்றுவெளிப்படுத்தியது போல் இப்போதும் வெளிப்படுத்துகிறது.
சிறப்பு அதிகாரிகள் வந்தால் என்ன, மத்தியப் படையே வந்தால்தான் என்ன..? எங்களால் ஆனதைச் செய்வோம்.. உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் மும்முனைத் தாக்குதல் தொடுக்கப் படுவதால், அதிகாரிகள் பாவம்,ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்.
ஆக, இந்தப் புயல், மழையில் அவதிப் படுவது என்னவோ அதிகாரிகள்தான்!