விவசாயிகளின் கனவை பூர்த்தி செய்ய துடிக்கிறார் ஸ்டாலின்.. திமுகவை புல்லரிக்கவைத்த எக்ஸ் எம்.எல்ஏ.

By Ezhilarasan BabuFirst Published Aug 14, 2021, 2:40 PM IST
Highlights

இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மையை இயந்திரமயமாக்குதல், பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் சந்தைகள் மேம்பாடு, வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்குதல், படித்த இளைஞர்களை சொந்த ஊர்களில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம் என பருவ கால மழையில் நனைந்தது போன்ற உணர்வை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்துகிறது.

இந்தியாவே உற்று நோக்கும் வகையில் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்  தாக்கல் செய்திருக்கிறார் என மாஜக பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்: 

விவசாயத்திற்கெனதனி நிதி நிலை அறிக்கை தேவை என மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. அந்த அடிப்படையில் நாங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிதி நிலை அறிக்கையில் தரிசு நிலங்கள் பரிசு நிலங்களாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை விதை ஊன்றப்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயம், பாரம்பர்யம், மர வளம், சுற்றுச்சூழல், நீர் வளம், மின் வினியோகம், அதிக உற்பத்தி, லாபகரமாக சந்தைப்படுத்துதல் என நிதி நிலை அறிக்கை உற்சாகமளிக்கும்  வகையில் இருக்கிறது. நெல், கரும்பு, தென்னை, பருத்தி, பனை, மா, பலா, வாழை ,சிறு தானியங்கள், காய்கறிகள், பூக்கள் என பல்வகை விவசாய நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மையை இயந்திரமயமாக்குதல், பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் சந்தைகள் மேம்பாடு, வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்குதல், படித்த இளைஞர்களை சொந்த ஊர்களில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம் என பருவ கால மழையில் நனைந்தது போன்ற உணர்வை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்துகிறது.நம்மாழ்வார், நெல்.ஜெயராமன் போன்ற அரும்பணியாற்றியவர்களை சிறப்பித்திருப்பதும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கால்நடை வளர்ச்சி, உள்நாட்டு மீன்வளம் என இதர விவசாயம் சார்ந்த  துறைகளிலும் கவனம் செலுத்தி, யாரும்  குறை கூறா வண்ணம் சகல தரப்பும் திருப்திப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக முதல்வராக மாண்புமிகு தளபதி அவர்கள் பொறுப்பேற்ற நூறாவது நாளில் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது தனி சிறப்பாகும். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்துக்காரர் என்ற வகையில் , விவசாயிகளின் கனவுகளை பூர்த்தி செய்யத் துடிக்கும் முதல்வரின் தனிப்பட்ட  ஆவல்  இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிகிறது. நெல்மணிகள் குவிய; மல்லிகைப் பூக்கள் மணக்க; கரும்பு காடுகள்  இனிக்க; தரிசு நிலங்க செழிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு பசுமை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!