காவிரி நீரைப் பெறுவதற்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்க பழனிசாமி முடிவு செய்துள்ளது காலம் தாழ்ந்த முடிவானாலும் வரவேற்கத்தக்கது எனவும் அனைத்துக்கட்சியினர் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளையும் தம்முடன் அழைத்து செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் விசாரணையை முடித்து, வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 தினங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.அந்தக் கடிதத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு 7 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டு இருந்தார்.ஆனால் அதை ஏற்று தண்ணீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மறுத்து விட்டார்.இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி நீருக்காக கர்நாடக முதல்வரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி இப்போதாவது சந்திக்க இருப்பதாக செய்தி வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அவர் சந்திக்கப் போகிறாரா இல்லையா என்பதைத் தாண்டி காலம் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடியு வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார். அனைத்து கட்சியினர், விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து சென்று கர்நாடக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் அதே போல் அனைத்து கட்சியினரை அழைத்து சென்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை எனவும் குறிப்பிட்டார்.