ஓட்டுக்கு பணம் கொடுத்த தயவு செய்து வாங்காதீங்கய்யா எனவும் அப்படி பணம் கொடுத்தால் செருப்பால அடியுங்கள் எனவும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போக்குவரத்து துறையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, கட்டண உயர்வை சற்றூ குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசின் இந்தக் கட்டண குறைப்பு வெறும் கண்துடைப்பு என்றும், கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெறும்வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவித்து தங்களது போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் சைக்கிளில் வந்து கலந்து கொண்டு பேசினார். அப்போது 1996 ஆம் ஆண்டிலேயே ஜெயலலிதாவை எதிர்த்தவன் நான் எனவும் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்கா சென்றவர் ரஜினி எனவும் தெரிவித்தார். தற்போது ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரை அல்ல; ஆட்டுத்தலை. காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன? என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.ஓட்டுக்கு பணம் கொடுத்த தயவு செய்து வாங்காதீங்கய்யா எனவும் அப்படி பணம் கொடுத்தால் செருப்பால அடியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.