அன்புசெழியன் என்னோட விழாவில் கலந்து கொண்டா என்ன தப்பு எனவும் முதலமைச்சரை சந்தித்தால் என்ன தவறு எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சிக்கி இதுவரை வெளியே தலைக்காட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன், இரு தினங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் விழாவில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, அன்புசெழியனிடம் முதலமைச்சர் எடப்பாடியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பேசியதாக கூறப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அன்புசெழியன் என்னோட விழாவில் கலந்து கொண்டா என்ன தப்பு எனவும் முதலமைச்சரை சந்தித்தால் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார். அவர் என்ன தேடப்படும் குற்றவாளியா எனவும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பிரச்சினை ஏற்பட்டது. அதை அவர் சட்டரீதியாக சந்தித்து வருகிறார் எனவும் குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது அவர் என்னோட விழாவில் கலந்து கொண்டதை சர்ச்சையாக்குவது தேவையில்லாதது எனவும் சினிமா துறையினரே அவரை நல்லவர் எனும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விஷயத்தை பெரிதாக்குவது தேவையில்லாதது எனவும் தெரிவித்தார்.