
2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதம் இசைப்பதற்கு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படவே, ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைப் படிக்காமல் வெளிநடப்புச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் ஆங்கில பதிப்பை ஆளுநர் படித்ததாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அது சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர், தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இதற்கு அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக, “ஜனநாயகம் சட்டமன்றத்தில் செத்துப் போச்சு”என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலத்தில் 12 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அது ஆவணமாகத்தன இருக்கிறது பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு தொழில் முதலீட்டில் தமிழகம் 4ம் இடத்தில் இருந்தது, தற்போது 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது, இதை இந்த அரசு சுட்டிக்காட்டவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார். ஒரே ஆண்டில் மாநிலத்தில் 20 ஆயிரம் பேர் தற்கொலைக்கு ஆளாகியுள்ளனர், இது நாளொன்றுக்கு 65 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால், தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். கல்வித்தரம் பற்றி சொல்லும்போது, 50க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது பற்றி சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் இல்லை. அரசு உதவி பெறும் கல்லூரி பள்ளிகளுக்கு காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி தரவில்லை, அதனால் கல்வியின் தரம் குறைந்துள்ளது. கற்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 100க்கு 52 பேர் என்று இருந்தது, இப்போது 100க்கு 48 பேராகக் குறைந்துவிட்டது, இதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கொலை நிலவரம் வெளியாகும் அளவுக்கு மோசமான சூழல். தமிழ்நாடு போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது.
இதைத் தடுக்க இந்த அரசை பலமுறை வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்” என்றார் இபிஎஸ்.