
தேர்தலுக்கு முன்பே தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என சத்தியமூர்த்தி பவனில் சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகில இந்திய தலைமையால் நியமனம் செய்யப்பட்டார். பதவியேற்ற சில மாதங்ளிலேயே செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் டெல்லி தரப்பிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியானது.
20க்கும் மேற்பட்ட மாவட்டத்தலைவர்கள், சில எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக புகார் அளித்து, அவரை மாற்ற வேண்டும் என டெல்லி தலைமையிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அப்போது செல்வப்பெருந்தகை அதை மறுத்து, குற்றச்சாட்டுகள் உள் நோக்கம் கொண்டவை எனக் கூறி பதவியில் தொடர்ந்தார்.
பிற காங்கிரஸ் தலைவர்கள் தவெக கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் செல்வப்பெருந்தகை, ‘‘திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தவெக உடனான கூட்டணி வதந்திகள் தவறு’’ எனக் கூறி வருகிறார். காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி விவகாரங்களில் தனிப்பட்ட கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் செல்வப்பெருந்தகையை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்ற டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் இருக்கிற கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அத்துடன் தமிழக காங்கிரஸார் சிலர் திமுககாரர்களாக மாறி திமுக தலைமைக்கு கட்டுப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் எனவும்அந்த ரிப்போர்ட்டில் ஒரு பின்குறிப்பையும் போட்டு அனுப்பி இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே செல்வப்பெருந்தகை அந்தப் பதவியில் இருந்து தூக்கப்படலாம் என்று கதர் கட்சியில் இருக்கிறவர்கள் உறுதியாக நம்பி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.