
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெற்ற வைர விழா குறித்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், அது வயதானவர்களுக்கான விழா என கிண்டல் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொன்னாருக்கு இப்போது தான் 16 வயதாகிறதா என திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில்,அவரது 122 ஆவது பிறந்த நாளையொட்டி மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என தெரிவித்தார்.
தற்போது மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு தொடர்ந்து இந்தியை தமிழகத்தில் திணிக்க முயற்சி செய்து வருகிறது என குற்றம்சாட்டிய ஸ்டாலின் அந்த முயற்சி ஒரு போதும் நடக்காது என தெரிவித்தார்.
கருணாநிதிக்கு நடைபெற்ற வைர விழா குறித்து கருத்துத் தெரிவித்ததன் மூலம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்தோர்களை கொச்சைப்படுத்துவது போல அமைந்துள்ளது என தெரிவித்தார்.
வைரவிழா வயதானவர்களுக்கான விழா என தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தற்போது 16 வயது தான் ஆகிறதா? என ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.