
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவை சந்திக்க தினகரன் இன்று பெங்களூருக்கு செல்லவிருக்கிறார்.
இரட்டை இலையை தன்வசமாக்கிக்கொள்ள லஞ்சம் கொடுத்த புகாரில் கைதாகி டெல்லி திஹார் சிறைக்கு சென்ற தினகரன் நிபந்தனை ஜாமீனில் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னை வந்ததும் தனது அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியுள்ள தினகரன் இன்று காலை சசிகலாவைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்படுகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பிப்ரவரி 14ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலிருந்து அவ்வப்போது சிறைக்குச் சென்று மூன்று முறை சசிகலாவைச் சந்தித்திருக்கிறார் தினகரன். பின் கடந்த மாதம், அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கிவைப்பதாக அறிவித்தநிலையில், தினகரன் மீண்டும் நான்காவது முறையாக சசிகலாவைச் சந்திக்க பெங்களூருக்குப் பயணமானார்.
ஆனால், அப்போது தினகரனைச் சந்திக்க சசிகலா மறுத்துவிட்டதாகப் பேசப்பட்டது. சிறைக்குச் சென்று சந்திக்கும் நேரம் முடிந்துவிட்டதால் தினகரன் ஓசூர் சென்று மீண்டும் திரும்பிவிட்டார் என்று அவரது தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்த தினகரன், சசிகலாவைச் சந்திக்க இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி செய்துவருகிறார்.
தற்போது திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், விவேக் ஆகியோர் பெங்களூருவிலேயே முகாமிட்டு வாரம் மூன்று முறை சசிகலாவைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவை தினகரன் சந்திப்பாரா, அப்படி சந்தித்தால் என்ன பேசுவார் என்பது பற்றிய விவரங்கள் அதிமுக அம்மா அணியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.