''எனக்கு எதிராக அவர்களால் ஒண்ணுமே பண்ண முடியாது'' கெத்தா பேசும் தினகரன்...

 
Published : Jun 04, 2017, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
''எனக்கு எதிராக அவர்களால் ஒண்ணுமே பண்ண முடியாது'' கெத்தா பேசும் தினகரன்...

சுருக்கம்

Dinakaran Exclusive Interview after 35 days

யாரையும் நான் எதிரியாக பார்த்தது இல்லை. எனக்கு எதிராக அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் நான் யாருடனும் உட்கார்ந்து பேசி சரி செய்து எதையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை என தினகரன் பேட்டியளித்துள்ளார்.

இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கைதாகி திஹார் சிறையில் ஒருமாதத்திற்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.  10 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் திஹார் சிறைக்கே சென்று தினகரனை வரவேற்றார்கள்.

நேற்று சென்னை திரும்பிய அவருக்கு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டு தடபுடலாக வரவேற்பளித்தனர். சுமார் ஒரு மாத சிறை வாசத்திற்குப் பின் அ.தி.மு.க. தினகரன் வருகையால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக அணிகள் இணைப்புக்காக கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்த நான் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்ததால் மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபடுவேன் அதிரடி காட்டினார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது;

கடந்த 45 நாட்களுக்கு முன்பு நமது கட்சியிலே உள்ள சில நண்பர்கள் நான் கட்சியிலே செயல்படுவதால்தான் தீவிரமாக இருப்பதால்தான் பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க முடியவில்லை, எங்களால் இரட்டை இலை சின்னத்தை பெறுவது கடினமாக இருக்கிறது என்றார்கள்.

அதனால் நான் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றார்கள். நானும் ஒதுங்குகிறேன் என்றேன். நான் இருப்பது தான் பிரச்சினை என்றால் கட்சி இணைப்புக்கு குறுக்கீடாக இருக்க மாட்டேன், ஒதுங்கி விடுகிறேன் என்றேன். ஒதுங்கிய பிறகு நான் இணைப்பு முயற்சி எப்படி போகிறது என்று பார்க்கிறேன் என்றும் சொன்னேன். ஆனால் 45 நாட்கள் நான் டெல்லியிலே சிறைக்கு சென்று விட்டு வந்த பின்பு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

நானும் மற்ற தொண்டர்களைப் போல கட்சி ஒன்றாக இணைய வேண்டும், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இருந்தேன். ஏதோ பயத்தின் காரணமாக அல்ல. ஆனால் அவர்கள் சொன்னது உண்மையான காரணம் அல்ல. பயம் காரணமாக அவர்கள் சொன்னதாக அன்றே சொன்னேன்.

ஆனால் இப்பொழுது பார்த்தால் இணைப்பு என்பதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. நான் ஒதுங்கியே இருப்பது நல்லது நடக்கும் என்பதால்தான். அதுதவறு. மற்ற தொண்டர்களோடு சேர்ந்து இந்த இயக்கம் பலப்பட வேண்டும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க நாமும் உதவியாக இருக்க வேண்டும் என்பதால் தொண்டர்களோடு ஆலோசித்து எங்கள் இதய தெய்வம் பொதுச் செயலாளரை சந்தித்து அவரது ஆணைப்படி செயல்படுவேன் என்று கூறினேன்.

ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏதோ வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு காரியமும் நடைபெறாததால் தொண்டனாக துணை பொதுச் செயலாளராக இருக்கும் நான் இந்த இயக்கத்தினால் 2 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்காக மீண்டும் தொண்டர்களோடு இணைந்து நான் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நான் சிறையில் இருந்த போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கடிதங்கள் அனுப்பினார்கள்.

மீண்டும் இங்கு வந்து கட்சி பணியை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே அவர்களோடு சேர்ந்து நானும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இணைப்பை செயல்படுத்த வேண்டும்.

இதற்காக எங்கள் இதயதெய்வம் பொதுச் செயலாளரை சந்தித்து அவரது அனுமதி பெற்று அவரது ஆணையை ஏற்று செயல்படுவேன்.

தலைமை கழகத்துக்கு எப்போது செல்கிறீர்கள், எப்போது பணிகளை தொடங்குகிறீர்கள், உடனடியாக செய்ய இருப்பது என்ன? எம்.எல்.ஏ.க்கள் உங்களை சந்தித்தார்களே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்.

கட்சியில் உள்ள அனைவரும் எனது நண்பர்கள். நாங்கள் எல்லாம் சகோதரர்கள். இதில் என்னை சந்திப்பவர்கள் தான் வேண்டியவர்கள். சந்திக்காதவர்கள் வேண்டாதவர்கள் என்பதெல்லாம் கிடையாது. ஆதரவாளர் எதிர்ப்பாளர் என்பதெல்லாம் கிடையாது. இது எங்களது இயக்கம். இதில் எல்லோரையும் போல் நானும் நமது கட்சி என்று பார்க்க கூடியவன்.

இதில் ஒரு சிலருக்கு ஒத்த கருத்து இருக்காது என்றாலும் எல்லோரையும் நமது சகோதரர்களாக நினைக்க கூடியவன். அதனால் அதில் வேண்டியவர் வேண்டாதவர் என்கிற எண்ணத்தோடு செயல்படவில்லை. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும், கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வந்து இணைந்து வலுப்பெற வேண்டும் என்ற காரணத்தால் ஒதுங்கி இருப்பதாக சொன்னேன்.

ஆனால் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது நன்றாக இருக்காது, நானும் தொண்டர்களோடு சேர்ந்து கட்சியை இணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் சிறையில் இருந்த போது தலைமை கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதே அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? என்று கேட்டதற்கு இதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும். அது தவறு என்று அந்த தவறை செய்தவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும் காலம் வரும். அவர்களும் திருந்தி தங்கள் தவறுகளை சரி செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உங்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடத்திய நாஞ்சில் சம்பத், புகழேந்தி போன்றவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் மீது புகார் கூறியிருக்கிறார்களே அது சம்பந்தமாக என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் உண்மையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்த அனைத்தும் எனக்கு தெரியாது. பத்திரிகைகளில் வந்தது கூட எனக்கு தெரியாது. கூட்டங்களில் பேசப்பட்டவையும் எனக்கு தெரியாது. நான் யாரையும் எதிராக கருதவில்லை. என்னை சில பேர் எதிரியாக நினைத்தால் அதற்காக நான் பயப்படவும் மாட்டேன்.

அதே நேரத்தில் நாஞ்சில் சம்பத் சுதந்திரமான மனிதர், அம்மாவால் பெரிதும் மதிக்கப்பட்ட இயக்க தொண்டர். சிறந்த பேச்சாளர். அவரது கருத்துக்களை அவர் வெளியிடுகிறார். நீங்கள் அதை சொல்ல வேண்டாம், இதை சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அவர் சொன்னது சரியாக இருக்குமா என்பதை யோசித்துத்தான் சொல்ல வேண்டும்.

தற்போது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த செம்மலை உள்ளிட்டோர் பகிரங்கமாக ஆட்சியில் முதல்-அமைச்சர் பதவியையும், கட்சி பணியையும் ஓ.பி.எஸ்.க்கு கொடுத்தால்தான் இணைப்பு சாத்தியம் என்பது போல் பேசி வருகிறார்களே? கேள்வியை முன்வைத்ததற்கு 
45 நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக 10, 20 பேர், நான் பெரிதும் மதிக்கிற சகோதரர்களாக இருக்கிறவர்கள், அமைச்சர்களாக இருக்கிறவர்கள், திடீர் என்று அவர்களை (சசிகலா-தினகரன்) ஒதுக்கி வைக்கிறோம் என்றார்கள். இணைப்புக்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

என்னுடைய எண்ணம் என்னவென்றால் கட்சி சிறப்பாக செயல்படுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதைதான் நான் சொல்கிறேன்.

சசிகலா சிறை சென்ற பிறகு, நீங்களும் சிறைக்கு சென்ற பிறகு பா.ஜனதா ஆதிக்கம் தமிழக அரசில் இருக்கிறது. தலைமைச் செயலகம் வரை சென்று மத்திய அமைச்சர்கள் கோப்புகளை எல்லாம் சரி பார்க்கிறார், தற்போது உள்ள ஆட்சியில் பாஜக தலையீடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு இன்றைக்கு சர்வ அதிகாரம் படைத்தவர்களாக கட்சியில் எல்லா முடிவும் எடுப்பவர்கள் நாங்கள்தான். பொதுச் செயலாளர் அதிகாரத்தை யெல்லாம் பறித்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் ஒதுக்கி வைப்போம் என்று சொல்கிற நண்பர்கள் அமைச்சர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க.வில் 3 அணிகள் என்று விமர்சனங்கள் வருகிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்றதற்கு  நான் யாருக்கும் எதிர்ப்பாக இல்லை. என்னை எதிரியாக நினைப்பவர்களை கூட நான் எதிரியாக நினைப்பதில்லை. அவர்களும் நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர் அமைச்சராக இருந்தாலும் அ.தி.மு.க.வின் தொண்டர் தான். காலம் அவர்களை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிலர் சில பயத்தால், சில நிர்ப்பந்தங்களால் அவ்வாறு பேசி இருக்கலாம். அதை எல்லாம் சரி செய்வோம். அப்போது அவர்கள் உண்மையை உணர்வார்கள். என்றும் உண்மைதான் வெற்றி பெறும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுடன் அமர்ந்து பேசும் திட்டம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலத்த அவர் யாரையும் நான் எதிரியாக பார்த்தது இல்லை. எனக்கு எதிராக அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் நான் யாருடனும் உட்கார்ந்து பேசி சரி செய்து எதையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பொதுச் செயலாளரை சந்தித்து பேசி முடிவு எடுப்பேன் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!