
ஆந்திராவில் மக்கள் அரசு சேவையைப் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருந்தால், கவலைப்படத் தேவையில்லை, ‘1100’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் போதும். லஞ்சம் பெற்ற அதிகாரியே வீடு தேடிவந்து பணத்தை திருப்பி கொடுத்துச் செல்வார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்துக்கு மாநில மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஊழலில் 2-வது இடம்
சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஊழல் குறித்த ஆய்வில் முதலிடத்தில் கர்நாடக மாநிலமும், 2-ம் இடத்தில் ஆந்திர மாநிலமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் ஊழலை வேறொடு ஒழிக்கும் முயற்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கி, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
1100 இலவச எண்
இதன்படி, பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று சேவை செய்யும் அதிகாரிகளைப் பிடிக்கவும், அந்த லஞ்சப்பணத்தை மீண்டும் மக்களிடமே அளிக்கவும் ‘பீப்பிள்பர்ஸ்ட் 1100’ என்ற திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 25-ந்தேதிஅறிமுகம் செய்தார்.
12 பேர்
அந்த திட்டம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ இந்த ஊழல் ஒழிப்பு திட்டத்தில் இதுவரை 12 அதிகாரிகள் மக்களிடம் வாங்கிய பணத்தை மீண்டும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளனர். குர்னூல் மாவட்டத்தில், பஞ்சாயத்து செயலாளர் ஒருவர் 10 நபர்களிடம் தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்’’ எனத் தெரிவித்தார்.
அமோக வரவேற்பு
இந்த திட்டம் செயல்படும் விதம் குறித்து மாநில அரசின் தகவல் தொடர்பு துறை ஆலோசகர் பி. பிரபாகர் கூறுகையில், “ முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்திய 1100 என்ற இலவச சேவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
3 ஆயிரம் பேர்
இதுவரை 3 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரைப் பெற்று குறுக்கு விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் இருக்கும் ஊழலை ஒழிக்க நல்ல முயற்சியாகும். இதனால், லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பயந்து மீண்டும் பணத்தை மக்களிடமே ஒப்படைத்து வருகிறார்கள். பீப்பிள்பர்ஸ்ட் என்ற திட்டத்தின் நோக்கமே மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நிறைவான சமூகம் உருவாக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
தீவிர நடவடிக்கை
இந்த திட்டம் என்பது, மக்கள் அரசு சேவையை இலவசமாகப் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அது குறித்து 1100 எண்ணுக்கு தகவல் அளித்தால், அந்த புகாரை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, செயல்பட்டு, அந்த பணத்தை அந்த குறிப்பிட்ட அதிகாரியே மக்களிடமே திருப்பிக் கொடுக்க வைக்கிறது என்ற செய்தியை மக்களுக்கு சொல்லும் திட்டமாகும். இதில் லஞ்சம் பெற்ற ்அதிகாரி மீது விசாரணையும், நடவடிக்கையும் இருக்கும் என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு?
ஆனால், இதுவரை லஞ்சமாக பெற்ற ரூ.500, ரூ.1000 பணம் மட்டுமே பொதுமக்களிடம் அதிகாரிகளால் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் ஏதும் இல்லை. மேலும், புகார் கொடுத்த நபர்கள் பாதுகாக்கப்படுவார்களா என்ற உத்தரவாதமும் இல்லை.
இடைத்தரகரா?
இதில் முக்கியமாக லஞ்சம் பெற்ற அதிகாரி மக்களிடம் நேரடியாக பணத்தை கொடுக்க வெட்கப்பட்டு, அதற்கு ஒரு இடைத்தரகரை நியமித்து பணம் கொடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.