
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் நாடுமுழுதும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களாக பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் மேலும் 50 நாட்கள் ஆகும் நிலைமை சீரடைய என்று பிரதமர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் படும் துன்பத்தை கண்டித்து நாடுமுழுதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. நாடுமுழுதும் கடையடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை பாரிமுனையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டமும் , மறியலும் நடந்தது. ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திமுகவினர் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒருங்கிணைந்து போராட்டம் செய்து வருகின்றனர். கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது ஒரு கட்சியினர் மட்டும் நடத்தும் அரசியல் போராட்டமல்ல நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து தமிழகம் முழுதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர்.