
பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கிதான் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில், பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாக எழுதப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நமது அம்மா நாளிதழில் வெளியான செய்தி நூற்றுக்கு நூறு உண்மைதான். நீட், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற விவகாரங்களில் மத்திய பாஜக அரசும் தமிழக அரசும் தமிழகத்தை வஞ்சிப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகின்றன என விமர்சித்தார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு தள்ளிப்போடுவதாக ஸ்டாலின் விமர்சித்தார்.