“உங்க பார்வை எந்த அளவுக்கு கேவலமாக இருக்கு...” அகத்தின் அழுக்கை அம்பலப்படுத்திட்டிங்க... கழுவி ஊத்தும் ராமதாஸ்!

 
Published : Apr 23, 2018, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
“உங்க பார்வை எந்த அளவுக்கு கேவலமாக இருக்கு...” அகத்தின் அழுக்கை அம்பலப்படுத்திட்டிங்க... கழுவி ஊத்தும் ராமதாஸ்!

சுருக்கம்

Ramadoss has urged the TN govt to arrest TN BJP leaders

உங்க பார்வை எந்த அளவுக்கு கேவலமாக இருக்கு என பார்த்திங்களா? அகத்தின் அழுக்கை அம்பலப்படுத்தி விட்டீர்கள் என டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கல்லூரி மாணவிகளுக்கு அவர்களின் பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுனர் புரோகித் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த எச்.ராசாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்கமுடியாதவை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் உள்ள பெரிய மனிதர்கள் சிலருக்கு பலியாக்குவதற்காக கல்லூரி மாணவிகள் சிலருக்கு அவர்களின் பேராசிரியை வலை வீசியது தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரத்தில் சட்டம் அதன் கடமையை செய்யவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், யாருமே கேட்காமலேயே ஆளுனர் பன்வாரிலால் புரோகித், இதில் தலையிட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது ஒரு பெண் செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு விடையளிப்பதற்கு பதிலாக, அவரது கன்னத்தில் தட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பெண் பத்திரிகையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தனது செயலுக்காக ஆளுனர் மன்னிப்புக் கேட்டார்.இந்த சிக்கலுக்கு இத்துடன் முடிவு கட்டியிருந்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்காது. ஆனால், பாரதிய ஜனதா நிர்வாகிகளான எச்.ராசாவும், எஸ்.வி. சேகரும் ஆளுனரின் ஆதரவாளர்களாக மாறி பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வார்த்தைகளால் போர் தொடுத்தது மன்னிக்க முடியாததாகும்.

இந்த விஷயத்தில் கருணாநிதிக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், கருணாநிதியையும் கனிமொழியையும் கொச்சைப்படுத்தும் வகையில் எச்.ராஜா சில கருத்துக்களைக் கூறி அவரது அகத்தின் அழுக்கை அம்பலப்படுத்தினார். மற்றொருபுறம், பெண் பத்திரிகையாளர்கள் பலரும் படுக்கையை பகிர்ந்து கொண்டு தான் பணிகளைப் பெறுகிறார்கள் என்று அருவருக்கத்தக்க கருத்தை எஸ்.வி.சேகர் முகநூலில் வழி மொழிந்தார்.

எச். ராஜா மீது ஏன் நடவடிக்கை இல்லை? பெண்மையைப் போற்றும் தமிழகத்தில், பெண்கள் குறித்த எச்.ராசா, எஸ்.வி.சேகரின் பார்வை எந்த அளவுக்கு கேவலமாக உள்ளன என்பதற்கு அவர்களின் இந்தக் கருத்துக்களே சாட்சி. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்தை வழி மொழிந்ததற்காக சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்த அவதூறுகளுக்காக எச். ராஜா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். சமூக ஊடகங்களை எச்.ராசா சாக்கடையாக்குவது இது முதல்முறையல்ல.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டபோது, அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறி அனைவரின் கண்டனங்களுக்கும் ஆளானார். அதன்பின்னர் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறி விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். இவ்வளவுக்கு பிறகும் எச்.இராசா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தமிழக பினாமி அரசு தயங்குவது ஏன்?

எச். ராஜா, எஸ்.வி. சேகரை கைது செய்க தமிழகத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யும் தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தையே அவதூறாக பேசும் ராசா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக ஆட்சியாளர்களுக்கு ராசா மீது அந்த அளவுக்கு அச்சமா? பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாரதிய ஜனதா அலுவலக தூண்களின் கால்களில் கூட விழுந்து கிடக்கக்கூடாது.

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் எச்.ராசா, எஸ்.வி.சேகர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேநேரத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதற்காக எஸ்.வி.சேகர் வீட்டு முன் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்கமுடியாதது. எனினும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!