
பேராசிரியை நிர்மலா தேவியை சிறையில் அடைக்கும் முன்பு நகைகளை அப்புறப்படுத்த முயன்ற போலீசாரை தடுத்த அவர் தாலி செயின் மட்டும் அகற்றக்கூடாது என அடம் பிடித்துள்ளார். ஆனால் விதிமுறைகளின்படி கட்டாயம் அகற்ற வேண்டும் என சொல்லி, சாதாரண மஞ்சள் கயிற்றை கட்டுவதற்காக தாலியை அகற்றியபோது நிர்மலா கதறி அழுதுள்ளார்.
கல்லூரி பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் விதமாக பேசிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிபிசிஐடி போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நிர்மலா தேவிக்கு கணவ்ர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகள்கள் இருவரும் கணவருடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான் நிர்மலா ஆடியோ சிக்கலில் மாட்டி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அன்று அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்தான் அடுத்த நாள் நிர்மலாவை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தியபோது அவர் அணிந்திருந்த தாலி செயின், சாதாரண செயின், மோதிரம், வளையல் போன்ற நகைகளை அகற்ற முயன்றனர்.
ஆனால் மற்ற நகைகள் அனைத்தையும் அகற்ற அனுமதித்த நிர்மலா தாலி செயினைத் தர மறுத்துவிட்டார். ஆனால் சிறை விதிகளின்படி நகைகள் அணியக் கூடாது என்பதால் தாலி செயினை போலீசார் அகற்றினர்.
அப்போது கதறி அழுத நிர்மலா தேவி அய்யோ தாலியை மட்டும் கழற்றாதீங்க என கெஞ்சியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மஞ்சள் கயிறு ஒன்றை வாங்கி வந்த பெண் போலீசார் தாலி செயினுக்கு பதில் மஞ்சள் கயிறைக்கட்டி சிறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின் போதெல்லாம் கலங்காமல் ஒத்துழைத்த நிர்மலா தாலியை அகற்ற வேண்டும் என சொன்னபோது கதறி அழுதது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.