இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம்… வரைவு அறிக்கை குழுவில் தமிழர்கள் புறக்கணிப்பு!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 4:38 PM IST
Highlights

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்த இலங்கை அரசு, குழுவில் தமிழகத்தை புறக்கணித்துள்ளது.

இலங்கையில் பொதுஜன பெராமுனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்கு தற்போது அதிபராக இருப்பவர் கோத்தபய ராஜபக்சே. இவர் தேர்தல் பிரசாரத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதனை ஒரே நாடு ஒரே சட்டம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். முன்னதாக இலங்கையிலுள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கோரச் சம்பவம், அதே ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதானமாக எதிரொலித்தது.  இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்‌சேவின் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சி,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் போன்ற இதர சட்டங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் எனத் தீவிரமாக பிரசசாரம் செய்தது. அந்தத் தேர்தலில் பொதுஜன பெராமுனா கட்சி வெற்றிபெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மஹிந்த ராஜபக்சே பிரதமராகவும் அதிகாரத்தில் அமர்ந்தனர். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க 13 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு  தற்போது அமைத்துள்ளது. இந்தக்குழுவின் தலைவராக புத்த மதத் துறவி ஞானசேரா சாரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஞானசார தேரரின் போடு பாலா சேனா  அமைப்பு முக்கியப் பங்குவகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதுமட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு காவல்துறையினரின் கடமைகளுக்கு எதிராக பிரச்னை ஏற்படுத்தியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆறு ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. பின்னர், 2019 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இத்தகைய குற்றப்பின்னணி உடைய ஞானசேரா சாரரை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் சற்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆளுங்கட்சியின் சர்வாதிகார முடிவை எவ்வாறு மாற்ற முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இவரது நியமனத்திற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.  எனினும் 13 பேர் கொண்ட அந்த குழுவில் 9 சிங்களர்களும் இஸ்லாமியர்கள் 4 பேரும் இடம் பெற்றுள்ளனர்.  இதனிடையே ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வருவதற்கான வரைவை தயாரிக்கும் குழுவிற்கு ஒரு குற்றவாளியை தலைவராக நியமித்தது ஏற்புடையது அல்ல என்றும் இந்த குழுவில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்றும் ஆதங்கம் தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், தமிழர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்  என்றும் எனவே புதிய சட்டத்தில் தமிழர்கள் நலனுக்கான அம்சங்கள் எவ்வாறு இடம்பெறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்த குழு வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!