தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை.. முறையாக இயக்கப்படுகிறது. துரை முருகன் அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 3:43 PM IST
Highlights

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது. 

முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து மாண்புமிகு நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் செய்தி வெளியீடு:- மாண்புமிகு உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரையில் நீரை தேக்கிவைக்க வழங்கிய ஆணையின்படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது. 

கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 28.10.2021 அன்று தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், 11.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்வரை,  மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது.  தமிழ்நாடு,  நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது.  

இதையும் படியுங்கள்: பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை/அறிவிப்பு  அளித்தபின் இன்று காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி  மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.  இது, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது.

  

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது.  இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. என அந்த செய்து குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: அண்ணாத்த ரிலீசுக்கு முன் ரஜினி டிச்சார்ஜ் ..?? ஒய்.ஜி மகேந்திரன் நம்பிக்கை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து கேரளா தமிழகத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது,  முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது 152 அடி வரை நீரைத் தேக்கி வைத்தல் அணை உடைந்துவிடும், இதனால் 35 லட்சம் மக்கள் உயிரிழந்து விடுவார்கள் என வெற்றுக் கூச்சலிட்டு வருகிறது. மொத்தத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதுதான் அதன் ஒற்றை முழக்கமாக இருந்து வருகிறது. இதே கோரிக்கையை கேரள மக்களும் அதன் பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் முழங்கி வருகின்றனர். மலையாள திரைத்துறையை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர் பிரித்திவிராஜ் உள்ளிட்ட நடிகர்கள் இதை பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளனர். ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என இருவர் குழு மற்றும் ஐவர் குழு ஆய்வு செய்தது அறிக்கை கொடுத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் அதன் பராமரிப்பு உள்ளிட்டவற்றை முழுமையாக கேரளாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக அரசு சார்பில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஏற்கனவே 137 அடியாக தான் இருக்கிறது, அதே நேரத்தில் அணையில் நீர்பிடுப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இந்த விவகாரம் குறித்து எதுவும் விசாரிக்க தேவையில்லை, 142 அடியாக நீரைத் தேக்கினாலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது தான் என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன, எனவே இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க கூடாது என வாதிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் அணையின் நீர்மட்டம் 136 அடியாக தான் உள்ளது, எனவே இந்த விவகாரத்தில் அவசரமில்லை, அணையின் தற்போதைய நீர்த்தேக்க விவகாரம் குறித்த மத்திய நீர்வளத் துறையின் முடிவு தொடர்பாக மனுதாரர் மற்றும் கேரள அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!