ஸ்டாலினை துளைத்தது மக்களா அல்லது மனசாட்சியா?

First Published May 7, 2017, 1:55 PM IST
Highlights
Special Polical story abou DMK Active Chief Stalin


’இந்த ஆட்சியை இப்படியே விட்டு வைத்திருக்கிறீர்களே? என்று மக்கள் என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆனால் ஜனநாயக முறைப்படி மட்டுமே தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.’ _ ஆர்.கே.நகரில் நடந்த தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நேற்று ஸ்டாலின் இப்படி பேசியிருப்பது அரசியல் விமர்சகர்களை அவரை நோக்கி உதடு சுழிக்க வைத்திருக்கிறது. 

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழக அரசு இயந்திரத்தின் ஓட்டம் இருக்க வேண்டிய வேகத்தை விட பின் தங்கிய நிலையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் அசாதாரண சூழலை பயன்படுத்தி தி.மு.க.வோ அல்லது பா.ஜ.க.வோ ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முனையும் என்று அரசியல் நோக்கர்கள் பேசிக் கொண்டே இருக்கும் நிலையில் பா.ஜ.க. மட்டுமே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அமித்ஷாவின் தமிழக விசிட், தமிழகம் சார்ந்த அத்தனை விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் மூக்கு நுழைப்பு என்று தன்னை அரசியலில் பரபரப்பாகவே வைத்துக் கொண்டிருக்கிறது அக்கட்சி. 

ஆனால் இதற்கு நேர் எதிரக தி.மு.க.வோ தேங்கிய குட்டையாகவே இருக்கிறது. அடுத்த முதல்வர் என்று தி.மு.க. தாண்டி பல நிலை அரசியல் மட்டங்களால் எதிர்பார்க்கப்படும் ஸ்டாலினோ பொறுமையின் பிறப்பிடமாக அசையாது இருக்கிறார். இது தி.மு.க.வினரை தாறுமாறாக வருத்தப்பட வைத்திருக்கிறது. 

இந்நிலையில் ஆர்.கே.நகரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசியவர் இந்த ஆட்சியை இப்படி விட்டு வைத்திருக்கிறீர்களே? என்று மக்கள் தன்னை பார்த்து கேட்பதாக ஒரு விஷயத்தை ஓப்பன் செய்தவர் ‘ஜெயலலிதா ஆபத்தான நிலையில் அப்பல்லோவில் இருந்த போது தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவினால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கேள்விப்பட்ட தலைவர் என்னையும், மற்ற நிர்வாகிகளையும் அருகில் அழைத்து ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஒரு நிலை வந்துவிட்டால், எந்த காரணம் கொண்டும் அதை பயன்படுத்தி நாம் ஆட்சிக்கு வந்துவிட கூடாது. மக்களை சந்தித்து ஜனநாயக முறைப்படி மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் திட்டங்கள் தீட்டி மக்கள் பணியாற்ற முடியும் என்றார். அதுதான் தலைவரின் விருப்பம்.” என்று கூறினார். இதைத்தான் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

‘களமிறங்காமலிருக்கும் தன்னை பார்த்து தன் கட்சியினர் வெகுவாக நோவது ஸ்டாலினின் மனசாட்சிக்கு புரிந்துவிட்டது. அதனால்தான் தன் மனசாட்சி துளைக்கும் கேள்வியை ஏதோ மக்கள் கேட்பதாக சொல்லி, அதற்கு விளக்கமும் தருகிறார். அந்த விளக்கமோ ஏற்புடையாதாக இல்லை.

சாதாரண கவுன்சிலர் சீட் காலியாக இருந்தாலும் கூட அதில் அரசியல் செய்தி அதை வின் பண்ண நினைப்பவர் கலைஞர். அப்பேர்ப்பட்ட அவர் முதல்வர் பதவி விவகாரத்தில் இப்படியொரு கட்டளையை இட்டிருப்பாரா? இதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை கருணாநிதி நல்ல உடல் நிலையுடன், ஆக்டீவாக இருந்திருந்தால் இந்நேரத்தில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்பதுதான் அத்தனை பேர் நினைப்பதும். 

கருணாநிதி இன்ஆக்டீவ் ஆகிவிட்ட நிலையில் ஸ்டாலின் தனது ‘பைபாஸில் ஆட்சியை பிடிக்க வேண்டாம்.’ எனும் கருத்தை இப்படி கருணாநிதியின் மேல் ஏற்றிக் கூறுகிறாரோ என எண்ணத் தோண்றுகிறது. 

அரசியல் என்பது ஒரு யுத்தம்தான். அதில் எந்நேரமும் நேர்மை, தர்மம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வாலியை இராமன் மறைந்திருந்து அம்பு எய்து கொன்றது போல் சில நேரங்களில் பக்கவாட்டில் பாலிடிக்ஸ் செய்வதும் அரசியல் தர்மமே. 
இந்த உண்மை ஸ்டாலினுக்கு புரிந்திருந்தும், ஆட்சியை கைபற்ற அவரை களமிறங்க விடாமல் தடுப்பது எது? ஒரு வேளை தன் முயற்சி தோற்றுவிட்டால் மக்கள் மத்தியிலிருக்கும் பெயர் கெட்டுவிடுமே என்று தயங்குகிறாரோ? 

எடப்பாடியின் அரசை ‘கோமா நிலையில் இருக்கிறது’ என்று விமர்சிக்கும் ஸ்டாலின், இப்படியொரு மோசமான நிர்வாகத்தில் மக்கள் இன்னும் 4 ஆண்டுகள் அவதிப்படட்டும் என்று நினைப்பது முரணாக இருக்கிறது. தங்களால் நல்ல ஆட்சி தரமுடியும் என்று நம்புபவர், மக்கள் நலனின் உண்மையான அக்கறையிருந்தால் உடனடியாக அதிரடி அரசியலில் இறங்கி மாநிலத்தை காப்பாற்றி இருக்க வேண்டிதானே?!

அதைவிடுத்து பேசா நிலையிலிருக்கும் கலைஞர் மேல் தன் கருத்தை ஏற்றிக் கூறிக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் மக்கள் சலித்துவிடுவார்கள்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ஏற்கனவே எட்டு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க., ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதில் கட்டாயம் வெல்வோம் அல்லது வெல்லும் நபரோடு இருப்போம் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம்.

ஆனால் நிச்சயமாக தி.மு.க.வுடன் கூட்டு போடாது. அப்படியானால் தி.மு.க. எப்படிப்பட்ட ஒரு கடினமான தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்! 

காலம் தாழ்த்தப்பட்ட முயற்சி என்பது தோல்வியை ஒத்துக் கொள்வதற்கு சமமானது என்பதை செயல் தலைவர் புரிந்து கொள்வாரா?”...என்று போட்டுத் தாக்குகிறார்கள். 
 

click me!