
தமிழகத்தின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கினால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, சட்டமன்ற தேர்தல் வரலாம் என்றே அனைவரும் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவை முன்னிலை படுத்தியே, கடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்தித்தது. ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், அரங்கேறும் அத்தனை நிகழ்வுகளும் மக்களால் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.
ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், அந்த பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்கு பதில் சசிகலா முதல்வராக அமர முயற்சித்த போது, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு பின்னர், கட்சியின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், இரட்டை இல்லை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பண பட்டுவாடா புகாரில் சிக்கி, அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றபோது. அத்து மீறி நுழைந்து, அதிகாரிகளை மிரட்டியதாக, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோர் மீது காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் 30 லட்ச ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் அமைச்சர் காமராஜ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு, அதில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு ஆகியவையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்தையும் விட, மணல் மன்னன் சேகர் ரெட்டியின் வாக்குமூலத்தில், முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஆளும் எடப்பாடி தரப்புக்கு மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பதை, அவர் பங்கேற்கும் கூட்டங்களில், காலியாக கிடக்கும் நாற்காலிகளே சாட்சி கூறுகின்றன. மறுபக்கம், பன்னீர்செல்வம் பங்கேற்கும் கூட்டங்களில், மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் பார்க்க முடிகிறது.
இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர்கள், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் ஆகிய அனைவரும், தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, சட்டமன்ற தேர்தல் வரும் என அடித்து கூறுகின்றனர்.
எனவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்னர், தமிழக அரசு கலைக்கப்பட்டு, சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் கூறுகின்றனர். இது, ஆளும் எடப்பாடி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.