
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஆட்சி ஒபிஎஸ்சுக்கும் இல்லாமல் சசிகலாவுக்கு இல்லாமல் எடப்பாடி கைக்கு போனது.
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். ஒபிஎஸ் தர்ம யுத்தம் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனால் இரட்டை இலையும் முடங்கி போனது.
டிடிவி தினகரன் எடப்பாடி பக்கம் இருந்தும் கட்சியை ஒழுங்குபடுத்த முடியாததால் முதலமைச்சர் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய்வது என முடிவு செய்தார்.
இதைதொடர்ந்து ஒபிஎஸ் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவது என இபிஎஸ் முடிவெடுத்து அணிகளை ஒன்றிணைத்தார். அப்போது ஒபிஎஸ் வைத்த கோரிக்கையான சசிகலாவை நீக்கம் செய்வது, ஜெ மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பது என இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி உத்தரவிட்டார்.
அப்போது சசிகலா குடும்பத்தாரிடம் இருக்கும் ஜெயா டிவியையும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் கைப்பற்றுவோம் எனவும் எடப்பாடி தெரிவித்திருந்தார்.
ஆனால் மேற்கண்ட நிறுவனங்கள் தனியார் வசம் என்பதால் அவற்றை அரசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றுள்ள டிடிவி தினகரன் வரும் 8 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டப்பேரவையில் அதிமுகவை குறை கூறினால் எம்.எல்.ஏக்கள் தலையிட வேண்டாம் என கோரி முதலமைச்சர் எடப்பாடி அறிவுரை வழங்கினார்.
இந்த அறிவுரை இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டது. மேலும் அதிமுகவுக்கு என்று புதிதாக தனி டிவி சேனலும் நாளிதழும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.