#BREAKING தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்... ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 9, 2021, 4:52 PM IST
Highlights

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. புதிய அரசு அமைந்தால் பழைய அரசின் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்தார். 

இதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள  சண்முகசுந்தரம் சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் 2002- 2008ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1996- 2001-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர். 2015- 2017ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் சண்முகசுந்தரம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், 1977- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். 1989- 1991ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். அரசு சார்பிலும், சி.பி.ஐ. சார்பிலும், ரயில்வே சார்பிலும் பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996- மே 2001 வரை அரசு வழக்கறிஞராக பல நூறு குற்ற வழக்குகளிலும், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு வழக்குகளிலும் வாதாடியவர். மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடி உள்ளார். 

லண்டனில் முறைகேடாக ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாரங்களை லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரட்டியவர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2000- ஆம் ஆண்டு அரசின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!