முதல்முறையாக கூடிய ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்.. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்..!

By vinoth kumarFirst Published May 9, 2021, 4:04 PM IST
Highlights

ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இக்கூட்டத்தில், 33 அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு 6 முடிவுகள் எடுக்கப்பட்டன. 

* ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

* பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சிஜன் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்த விதமான சூழலிலும் ஆக்சிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் ரெம்டெசிவர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில், விற்பனையாவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*  தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.

*  மருத்துவத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

click me!