ஓ.பன்னீர் செல்வம் அணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். எடப்பாடி அணியின் வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுது. இதனையடுத்து தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகனை போட்டியில் இருந்து விலகுவார் என ஓபிஎஸ் அறிவித்தார். இதனையடுத்து செந்தில் முருகனுக்கு அமைப்பு செயலாளர் பதவியையும் ஓபிஎஸ் வழங்கி இருந்தார். இந்தநிலையில் செந்தில் முருகன் எடப்பாடி அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் முருகன் நீக்கம்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. B. செந்தில் முருகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்