ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது நல்லது தான்.. எப்படி தெரியுமா? அன்புமணி சொன்ன தகவல்.!

By vinoth kumar  |  First Published Mar 9, 2023, 12:11 PM IST

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுனர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுனர் கேட்கவில்லை.


ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுனர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது; தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.

Latest Videos

இதையும் படிங்க;- ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை.. அதை ஒருபோதும் உங்களால் கழுவவே முடியாது.. ஜோதிமணி ஆவேசம்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இரு காரணங்களின் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டதாகும். முதலாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், ஒரிசா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து 03.08.2021-ஆம் நாள் தீர்ப்பளித்த  சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

மற்றொருபுறம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த சர்ச்சை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக ‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு’’ என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.

இதையும் படிங்க;-  2 நாளில் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.? நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்

இரண்டாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ரவி உறுதியாக நம்பியிருந்தால், கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் சட்டம் இயற்றி ஆளுனருக்கு அனுப்பிய உடனேயே திருப்பி அனுப்பியிருந்திருக்கலாம். அவ்வாறு அனுப்பியிருந்தால் உடனடியாக தமிழக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அப்படி இரண்டாவது முறையாக சட்டமுன்வரைவை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுனர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது ஏன்? அப்படியானால், அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே  தோன்றுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுனர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுனர் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வினா எழுப்புவது ஏன்? 2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 18 பேர் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டனர். அந்த 18 பேரின் தற்கொலைக்கும்,  அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததற்கும் தமிழக ஆளுநர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவை அனைத்தையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு வகையில் நல்லது தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ சட்டப்பேரவை மீண்டும் இயற்றி அனுப்பும் போது அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் அளித்தே தீர வேண்டும். அதனால் தான் இதை நல்லது என்கிறேன்.

எனவே, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுனர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின்  நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!