காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க இருப்பதாக வெளியான அறிவிப்பால் வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிப்பு
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நடுமுதுகை உடைக்கும் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை இந்த விடியா திமுக அரசு சமீப காலமாக செய்து வருகிறது. கோடை காலங்களில் ஆற்றுப் பாசனம் மற்றும் ஏரிப் பாசனங்களில் தண்ணீர் வரத்து இல்லாத நேரங்களில், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் பாசனம் போன்றவற்றையே நம்பி விவசாயப் பணிகள் நடைபெறும். இந்த நேரத்தில்தான் மின்சாரம் விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும். மேலும், கன மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இந்த விடியா அரசு முழு நிவாரணம் வழங்கவில்லை.
பயிர் காப்பீட்டு திட்டத்தின்படியும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக பெற்றுத் தரவில்லை. எந்தவிதத்திலும் நம் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி, விவசாய உற்பத்தியைப் பெருக்கி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியும், எனது தலைமையிலான அம்மா அரசும் சாதனை படைத்தது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக்கொண்ட இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலை மாறி, தற்போதைய விடியா திமுக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள். அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர். தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, சீரான மின் வினியோகத்தையும் தராமல், விவசாயிகளுக்கு விளையாட்டு காட்டுகிறது இந்த விடியா அரசு.
24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும்போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் விவசாயிகள், தற்போதைய இந்த ஆட்சியாளர்களின் தாந்தோன்றித்தனமான நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு விவசாயிகள் உள்ளாகி இருக்கிறார்கள். ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த விடியா திமுக அரசு, தமிழ் நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. இது போன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.
விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்று சொன்னால், அந்த மின்சார உற்பத்திச் செலவு குறையும் என்ற ஒரு தப்புக் கணக்கை இந்த ஆட்சியாளர்கள் போடுகிறார்கள். விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், மின்சார வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் மக்களை கசக்கிப் பிழிவதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் நிலையில், தேவையான அளவு நிலக்கரியை கையிருப்பில் வைத்து, அனல் மின் நிலையங்களில் அதன் முழு அளவு உற்பத்தியைத் துவக்கி, கோடை காலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் இவை மூன்றும் முழுமையாக பெறப்படுமானால் விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நிலை ஏற்படும். எனவே போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வேளாண் தொழில் மென்மேலும் சிறந்தோங்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்