அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது நீதிமன்ற காவலை நீட்டிப்பது தொடர்பாக உத்தரவிடப்படும் என தெரிகிறது.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
undefined
நீதிபதி முன் இன்று ஆஜர்
இதனையடுத்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜியை காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மற்றும் இந்த மாதம் 12-ம் தேதிகளில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த கால கட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து புழல் சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 12ம் தேதி நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
திமுக அமைச்சர்களுக்கு செக்..! சொத்து பட்டியலோடு ஆளுநர் ரவியை சந்திக்கும் அண்ணாமலை