திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளார். அப்போது அமைச்சர்களின் சொத்து பட்டியலை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் பாஜக- திமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
மேலும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ள நடை பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். நடைபயணத்திற்கு முன்னதாக திமுகவினரின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை
இந்த பட்டியலை தமிழக ஆளுநர் ரவியிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வரும் வகையில் திட்டம் தயாரித்துள்ளதாகவும் அந்த திட்டம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க பாஜக நேரம் கேட்டிருந்தது.
ஆனால் தமிழக முதலமைச்சர் நேரம் வழங்காத நிலையில், ஆளுநரிடம் பாஜக அந்த திட்ட அறிக்கையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மாலை 3 மணிக்கு ஆளுநர் ரவியை அண்ணாமலை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக அரசின் செயல்பாடுகள், அமைச்சர்களின் சொத்து பட்டியில், செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவகைகள் குறித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை நடை பயணத்தால் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்.... தடை விதியுங்கள்- இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி