
தற்போதைய எடப்பாடி அமைச்சரவையில், கல்வி துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருவதால், கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் எடப்பாடி.
முதல்வர் எடப்பாடியை அரசியலுக்கு கொண்டு வந்தவர் செங்கோட்டையன். ஆனால், செங்கோட்டையனை அரசியலில் தலையெடுக்க விடாமல் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் எடப்பாடி.
எனினும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவால் மீண்டும் அமைச்சரானார் செங்கோட்டையன். அவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், அவருடைய விசுவாசத்தின் மீது யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இந்நிலையில், எடப்பாடி அமைச்சரவையில், மீண்டும் அமைச்சரான அவர், தாம் பொறுப்பு வகிக்கும் கல்வி துறையில், கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள், பலரது பாராட்டுக்களை பெற ஆரம்பித்து விட்டது.
பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகளில் மாற்றம் உள்ளிட்ட, கல்வி துறையில் அவர் மேற்கொண்ட எட்டு முயற்சிகள், சமூகத்தின் அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.
குறிப்பாக, இதற்கு முன்பாக, கல்வி அமைச்சராக இருந்த, பன்னீர் அணியை சேர்ந்த பாண்டியராஜன், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், செங்கோட்டையன், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால், அவரால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அவரும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, தமது துறையில் நல்ல மாற்றங்களை தந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன், கொங்கு மண்டலத்தில் உள்ள சில எம்.எல்.ஏ க்களுக்கும், செய்ய வேண்டியதை செய்து கொடுத்து, தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
முதல்வரை பொறுத்தவரை, ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக தினம், தினம் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருவதால், அவரால், தனக்கென பெரிய அளவிலான ஆதரவாளர் வட்டத்தை வளைக்க முடியாமல் போராடி வருகிறார்.
ஆனால், செங்கோட்டையனை பொறுத்தவரை, ஏற்கனவே தமக்கிருந்த செல்வாக்கு மற்றும் தொடர்புகளால், தற்போது கிடைத்துள்ள அமைச்சர் பதவியாலும், தமது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டி வருகிறார்.
இதனால், ஏற்கனவே செங்கோட்டையன்-எடப்பாடி இடையே நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் பழைய பகை, தற்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், செங்கோட்டையனின் செல்வாக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் நாளுக்கு நாள் பெரு வருவது, எடப்பாடியை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மறுபக்கம், சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவு, செங்கோட்டையனுக்கு அதிகம் இருப்பதாலும், கல்வி துறையில் அவர் மேற்கொண்டு வரும் சீர்திருத்த முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியாததாலும், தவிப்பில் இருக்கிறார் எடப்பாடி
ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர், தமக்கு கிடைத்திருக்கும் அமைச்சர் பதவியை பயன்படுத்தி, நல்ல பெயரை சம்பாதிப்பதுடன், மீண்டும் தமது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் செங்கோட்டையன்.
அதனால், செங்கோட்டையனுக்கு தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியாததால், என்ன செய்வது? என்று தெரியாமல் முதல்வர் எடப்பாடி அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.