திமுகவில் உள்ளவர்கள் எல்லாம் ரவுடிகள் என்ற பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் சேகர்பாபு, பா.ஜ.க தான் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், திமுகவில் உள்ளவர்கள் சமய சுத்த சன்மார்க்க இயக்கத்தினர் போன்று உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பழனி கோயில் கோசாலை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக காலனியில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் 160 திருநங்கைகளுக்கு தலா 2 ஆயிரம் ரொக்கப்பணம், மளிகை பொருட்கள், சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், பழனி தண்டாயுதபாணி கோவிலின் கோசாலை இடத்தை சிப்காட்டுக்கு வழங்குவது ஏன் என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
பழனி கோசாலை இடம் சிப்காட்டுக்கு வழங்கப்படவுள்ளதாக அவதூறு பரப்பப்படுகிறது. கோசலை கோயிலுக்கு சொந்தமான இடம். சிப்காட் பயன்பாட்டுக்கு இடத்தை வழங்குமாறு சம்மந்தப்பட்ட துறை கேட்டு இருந்தாலும், இறை சொத்து இறைவனுக்கே என்ற வகையில் இடத்தை வழங்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
திமுகவே 40 தொகுதிகளிலும் வெல்லும்
இதனை தொடர்ந்து திமுகவில் உள்ளவர்கள் ரவுடிகள் என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கூறியது குறித்து கேட்டதற்கு , இந்த ஆண்டு சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்த்தால் அதில் பா.ஜ.க.வினர் தான் அதிகம் உள்ளதாக கூறினார். பா.ஜ.க.வினர் தான், தினமும் அவதூறு பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுத்து, மதவாதத்தை தூண்டி, மக்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுப்படுவதாகவும், திமுகவினர், சமய சுத்த சன்மார்க்க இயக்கத்தினர் போன்று உள்ளதாக கூறினார்.
அண்ணாமலை நடைப்பயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பா.ஜ.க நிர்வாகிகள் குறித்த புகார்கள் தான் அதிகம் வரும் என கூறிய அவர் , நூறு அண்ணாமலை நடைப்பயணம் சென்றாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறினார்.