"தலைமை செயலகம் கூவத்தூர் ரிசார்ட் அல்ல" - அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

First Published Apr 21, 2017, 5:48 PM IST
Highlights
secretariat is not koovathur resort says tks ilangovan


ஜெயலலிதா என்ற ஒரு வலிமையான ஆளுமை இல்லாததன் நிலை இப்போதுதான் புரிகிறது. ஜெயலலிதா இருந்த போது, அவரே அனைத்துக்கும் தலைமை.

ஆனால், இன்று எண்ணற்ற தலைமை உருவாகி உள்ளதது. ஒவ்வொரு தலைமைக்கு கீழும் , சிறு, சிறு தலைவர்களும் உருவெடுத்துள்ளார்.

கட்சி இரு அணிகளாக பிரிந்ததால், ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். தற்போது இரு அணிகளும், ஒன்றாக இணைய முயற்சிக்கும்போது மூன்றாவதாக ஒரு அணி தலை காட்டுகிறது.

இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகளுக்குள் பிரச்சினைகளும் அதிக அளவில் உருவெடுத்துள்ளன. எனவே, அவற்றை தீர்க்கும் வகையில் அடிக்கடி பஞ்சாயத்துகளும் நடந்து வருகின்றன.

பஞ்சாயத்துக்களை, கட்சி அலுவலகங்களிலோ, அமைச்சர் வீடுகளிலோ வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. ஆனால், சமீப காலமாக, கட்சி விவகாரம் குறித்த அமைச்சர்களின் கூட்டங்கள் அடிக்கடி தலைமை செயலகத்தில் நடந்து வருகின்றன.

அரசு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய தலைமை செயலகத்தில், கட்சி பஞ்சாயத்துக்களை நடத்தி வரும், முதல்வர்  எடப்பாடிக்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை, கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுக-வுக்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், கட்சிப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆலோசனை நடத்தலாம். இல்லாவிட்டால் கூவத்தூர் நட்சத்திர விடுதியில்கூட அமர்ந்து ஆலோசனை நடத்தலாம். 

தயவுசெய்து தமிழகத்தின் நிர்வாகச் சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கான இடமாக மாற்றாதீர்கள் என்று திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் அறிக்கை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார்.

click me!