ஒன்றாக செயல்படுவோம் எனும் சசிகலா... திமுகவுக்கு எதிராக ஈபிஎஸ்-ஓபிஎஸ்-சசிகலா ஓரணியில் திரள்வார்களா..?

By Asianet TamilFirst Published Feb 8, 2021, 8:50 PM IST
Highlights

 அதிமுக பொது எதிரி் ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என சசிகலா கூறியிருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் விடுக்கப்பட்டு சமிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

பெங்களூருவிலிருந்து இன்று தமிழகம்  திரும்பிய சசிகலாவால், அதிமுகவில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா நேரடியாக செல்லாதவண்ணம், பராமரிப்பு என்ற காரணத்தைக் காட்டி அதிமுக அரசு மூடி வைத்திருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபியிடம் அதிமுக மூத்த அமைச்சர்கள் புகார் அளித்தனர். சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில், அவரை வரவேற்கும் விவகாரத்தில் பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர்.
 


இந்நிலையில் வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “தீவிர அரசியலில் நான் ஈடுபடுவேன். ஜெயலலிதா நினைவிடம் ஏன் மூடப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அன்புக்கு நான் அடிமை; கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். அதிமுக பொது எதிரி் ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம். அதிமுக முன்னேற்றத்துக்காக எனது வாழ்நாளை அர்ப்பணிப்பேன்” என்று தெரிவித்தார்.


சசிகலா இதில் கூறியது ஹைலைட் ஆனது, “அதிமுக பொது எதிரி் ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம்” என்று சொன்னதுதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 5 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதிமுக பிளவுப்படாமல் இருந்திருந்தால், அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள்தான் என்று கூறப்பட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா - தினகரன் அணி தனித்து தேர்தலை எதிர்கொள்ளும்போது, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் சிலவற்றில் அதிமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 


அண்மையில் ‘துக்ளக்’ விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, திமுகவைத் தடுக்க சசிகலாவையும் அதிமுக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது அந்த அடிப்படையில்தான். இந்நிலையில் அதிமுகவின் பொது எதிரியை ஆட்சி கட்டிலில் அமராமல்  தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என்று சசிகலா கூறியிருப்பது திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை அவர் விரும்புவதாகப் பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் தனக்கு எதிராகத் திரும்பியதை மனதில் வைத்துக்கொள்ளாமல், திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் ஒரே அணியாகச் செயல்படுவோம் என்று சசிகலா கூறியிருப்பது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே கருதப்படுகிறது.


ஏற்கனவே திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க சசிகலா அணியையும் அதிமுகவையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை டெல்லி பாஜக மேலிடம் செய்துவருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே சசிகலாவும் அதுபோன்ற விருப்பத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். அதிமுகவின் எதிரியான திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைவார்களா என்பதுதான் இப்போதிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

click me!