சசிகலா திமுகவின் ‘பி’ டீமா..? அதிமுகதான் பாஜகவின் ‘பி’ டீம்... கனிமொழி சரவெடி..!

By Asianet TamilFirst Published Feb 8, 2021, 8:36 PM IST
Highlights

திமுகவின் ‘பி’ டீமாக ச‌சிகலா செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு அதிமுகத்தான் பாஜகவின் ‘பி’ டீமாக செயல்படுவதாக திமுக மாநில மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். 
 

திமுகவின் ‘பி’ டீமாக சசிகலாவும் டிடிவி தினகரனும் செயல்படுகின்றனர் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழியிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கனிமொழி, “திமுகவுக்கு எந்த ‘பி’ டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குன்றிய அம்மையாரை (சசிகலா) அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.” என்று தெரிவித்தார்.


மேலும் கனிமொழி கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவார். அதிமுகவினர் செய்யாததையெல்லாம் செய்ததாகச் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்கள். ஆனால், திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது. திமுக கூட்டணி அப்படியே தொடரும். ஏதாவது மாற்றம் இருந்தால், திமுக தலைமை முடிவு எடுக்கும்.
அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான் இப்போதும் தொடர்கிறது. அதில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மு.க.அழகிரி குறித்து மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார். ஆட்சிக்கு வந்தபிறகு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று திமுக கூறிய நிலையில், அந்தக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்திருக்கின்றன. இந்தக் கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்” என்று கனிமொழி தெரிவித்தார்.

click me!