சொன்னார்கள்..! நம்பினேன்..! ஆனால் இப்போது? ரகசியம் உடைத்த சசிகலா..!

By Selva KathirFirst Published Jun 16, 2021, 11:42 AM IST
Highlights

நேரடியாக அரசியல் களத்திற்கு வரத் தேவையான கட்டமைப்பு தற்போது சசிகலாவிடம் இல்லை. தேர்தலுக்கு முன்னதாக டிடிவி தினகரன் வைத்திருந்த கட்டமைப்பு மூலம் சசிகலாவிற்கு சிறையில் இருந்து வரும் போது வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி படு தோல்வியை தழுவிய நிலையில் அந்த கட்சியின் கட்டமைப்பும் சீர்குலைந்துவிட்டது. 

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்கள் சரி வெற்றி பெறட்டும் என்று ஒதுங்கியிருந்தாக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ள நிலையில் இபிஎஸ் அனுப்பிய தூது, டிடிவி ஓரங்கட்டப்பட்டது தொடர்பான பல்வேறு ரகசியங்கள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான போது தொண்டர்களை திரட்டி தனது பலத்தை சசிகலா காட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இப்படியான அறிவிப்பை வெளியிட்டால் தொண்டர்கள் தன் வீட்டின் முன்னால் குவிந்துவிடுவார்கள் என சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் மொத்தமே 12 பேர் மட்டுமே சசிகலா வீட்டின் முன் கூடினர். இதனை தொடர்ந்து தேர்தல் பரபரப்பில் அனைவரும் சசிகலாவை மறந்து போய்விட்டனர். ஆனால் தேர்தல்முடிந்த பிறகு சசிகலாவிற்கு மறுபடியும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது.

நேரடியாக அரசியல் களத்திற்கு வரத் தேவையான கட்டமைப்பு தற்போது சசிகலாவிடம் இல்லை. தேர்தலுக்கு முன்னதாக டிடிவி தினகரன் வைத்திருந்த கட்டமைப்பு மூலம் சசிகலாவிற்கு சிறையில் இருந்து வரும் போது வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி படு தோல்வியை தழுவிய நிலையில் அந்த கட்சியின் கட்டமைப்பும் சீர்குலைந்துவிட்டது. மேலும் சசிகலா, தினகரனை நம்பி தங்கள் பதவிகளை தியாகம் செய்ய தற்போது அதிமுகவின் ஒரு கிளைச் செயலாளர் கூட தற்போது தயாராக இல்லை. இதனால் தான் அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளை சசிகலா குறி வைத்துள்ளார்.

தற்போதைய சூழலில் அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே அதிகாரப்போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் ஊடகங்களை தன் பக்கமாக திருப்ப தினமும் ஒரு ஆடியோவை வெளியிட்டுக் கொண்டிருந்த சசிகலா தற்போது மூன்று நான்கு வீடியோக்கள் என்று அதிகரித்துள்ளார். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரையும் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பதோடு தனது அரசியல் வருகைக்கான ஆழம் பார்க்கவும் ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் லேட்டஸ்டாக தொண்டர் ஒருவருடன் பேசும் போது எதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கினீர்கள் என்று அவர் கேட்க, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்கள், சரி வெற்றி பெறட்டு என்று ஒதுங்கினேன். ஆனால் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிவிட்டது எனவே கட்சியை சரி செய்ய முடிவு செய்துள்ளதாக சசிகலா அந்த தொண்டரிடம் பதில் அளித்துள்ளார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்கள் என்று சசிகலா கூறியது யாரை என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து சசிகலாவிற்கு நெருக்கமான தரப்பில் விசாரித்த போது, சிறையில் இருந்து வெளியே வந்தது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருந்து சசிகலாவிற்கு தூது வந்ததாக கூறுகிறார்கள். சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை அமைதி காத்தால் போதும் பிறகு என்ன என்பதை பேசிக் கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பில் இருந்து வந்த தூது கூறிக் கொண்டே இருந்தது. மேலும் கட்சியின் நலன் கருதி அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தலில் எடுக்க கூடாது என்றும் சில தலைவர்கள் சசிகலாவிடம் பேசினர். இதனை எல்லாம் ஏற்று தான் சசிகலா அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்க முடிவு செய்தார்.

ஆனால் இதனை தினகரன் ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பின் தூதுக்களை ஏற்க கூடாது என்று தினகரன் திரும்பத் திரும்ப கூறியுள்ளார். ஆனால் அந்த சூழலில் அதிமுகவிற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம் என்று கூறியதுடன் தினகரனையும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதனை ஏற்க மறுத்த தினகரனை சசிகலா சுத்தமாக தற்போது ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அதாவது தேர்தலுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய தூதை ஏற்றே சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதாக தற்போது கூறியுள்ளார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி தரப்பு பிடி கொடுக்காத நிலையில் தான் தொண்டர்களுடன் நேரடியாக பேசும் வேலையில் அவர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். எது எப்படியோ விரைவில் அரசியல் களத்திற்கு வருவதற்கான ஆயத்தங்களை சசிகலா மிகவும் வலுவாக மேற்கொண்டு வருவது மட்டும் தெரிகிறது.

click me!